இன்டர்நெட் இல்லாமலே சாட் செய்யும் வசதி ஹைக் டைரக்ட்(Hike Direct) அறிமுகம்.

ஸ்மார்ட்போன் பயனாளிகள் இனி சாட் செய்ய வேண்டும் என்றாலோ, கோப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாலோ இணைய இணைப்பு பற்றி கவலைப்பட வேண்டாம். இணைய வசதி இல்லாமேலேயே அருகாமையில் இருப்பவருடன் செய்திகளை பரிமாறிக்கொள்ளக்கூடிய வசதியை ஹைக் மேசேஜிங் சேவை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் உள்ளிட்ட சேவைகள் பிரபலமாக இருக்கின்றன. இந்த வரிசையில் வைபர், லைன் தவிர இந்திய மெசேஜிங் சேவையான ஹைக்கும் பிரபலமாக இருக்கின்றன.
பெரும்பாலும் இந்திய பயனாளிகளை கொண்ட ஹைக், இப்போது 'ஹைக் டைரக்ட்' எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம், போனில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் கூட மற்றவர்களுடன் சாட் செய்யலாம். இந்த வசதியை பயன்படுத்துவதால் இணைய கட்டணமும் செலவாகாது.
'ஹைக் டைரக்ட்', ஸ்மார்ட்போன்களில் உள்ள வை-பை டைரக்ட் எனும் வசதியின் அடிப்படையில் செயல்படுவதால் இதை பயன்படுத்த இணைய இணைப்பு தேவையில்லை. வை-பை மூலமே தொடர்பு கொள்ளலாம். ஆனால் ஒன்று, இந்த வசதியை பயன்படுத்த பயனாளிகள் 100 மீட்டர் எல்லைக்குள் இருக்க வேண்டும்.
ஹைக் டைரக்ட் வசதியை இயக்கியதும், 100 மீட்டர் எல்லைக்குள் இருப்பவர்களை தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்கலாம். அதன் பிறகு இருவரும் பரஸ்பரம் அவரவர் போன் புக்கில் இருந்தால் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம்.
செய்தி பரிமாற்றம் தவிர, புகைப்படம் மற்றும் வீடியோ கோப்புகளையும் இதன் மூலம் அனுப்பலாம். தொடர்பு விவரங்களையும் அனுப்பி வைக்கலாம்.
100 மீட்டர் எல்லைக்குள்தான் பயன்படுத்த முடியும் என்பதால் வழக்கமான மெசேஜிங் சேவை போல சரளமாக பயன்படுத்த முடியாது என்றாலும், ஒரே அறையில் இருப்பவர்கள் அல்லது ஒரே வளாகத்தில் இருப்பவர்கள் கோப்பு பரிமாற்றம் செய்து கொள்ள இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏற்கனவே உள்ள ஹைக் மேசேஜிங் சேவையுடனான கூடுதல் அம்சமாக இந்த வசதி செயல்படுகிறது.
இந்த வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ஹைக் மெசேஜிங் செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://get.hike.in/
THANKS TO GOOGLE
0 comments:
Post a Comment